சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சியில், கடந்த 13ஆம் தேதி, "அறிவு ஒளி பரவ!' என்ற தலைப்பில், தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா உரையாற்றினார். அவரது உரையில்... "புத்தகக் கண்காட்சிகளில் வெறுமனே பார்த்துவிட்டுச் செல்லாமல், நூல்களை வாங்கிச் செல்கின்ற மக்கள் நிரம்பியது தமிழ்நாடு மண் என்பதற்கு எடுத்துக்காட்டு சென்னை புத்தகத் திருவிழா. இன்றைக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் எல்லா மாவட்டங் களிலும் வெற்றிகரமாக இந்த புத்தகத் திருவிழா நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. எங்கு நோக்கினும் நூல்கள், எல்லா இடங்களிலும் எழுத் தாளர்களுக்கு அங்கீகாரம், பதிப்பாளர்களுக்கு ஒரு புது வாழ்வு என்கின்ற அளவிற்கு தமிழ்நாடு இன்றைக்கு எல்லாவற்றிலும் முன்னோடியாகத் திகழ்கிறது.
இந்த நிகழ்ச்சியினுடைய சிறப்பாக இலக்கிய ஆளுமைகளுக்கு தமிழக முதலமைச்சர் விருதுகளை வழங்கி கௌரவித்திருக்கிறார். இந்த புத்தகக் கண்காட்சி என்பது நீண்ட நெடுங்காலமாக தொய்வின்று நடந்துவருவதும், மக்கள் அதற்கு திரளாக வருவதுமாக, பார்த்து பரவசப்படக்கூடிய ஒன்று. எனக்கு தெரிந்து இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திலும் இப்படி ஒரு நிலை கிடையாது.
இன்றைய நிகழ்ச்சிக்கு அதிக விளம்பரம் இல்லை. ஆனால் வந்திருப்பவர்கள் அதிகமென்று நான் நம்புகின்றேன். இதுபோன்ற இடங்களுக்கு வருகிறவர்கள் யார் என்பதை பொறுத்துதான் இந்த அரங்கத்தினுடைய தகுதி தீர்மானிக்கப்படுகிறது. இது ஒரு திரைப்படக்காட்சி அல்ல. உங்களை மகிழ்விப்பதற்கு ஒரு திரைப்படத்திலே நடிக்கக்கூடிய நடிகரோ, அல்லது அது தொடர்பானவர்களோ இங்கு வரவில்லை. அதற்கு மாறாக இலக்கியம் பேசுகிறவர்கள், வரலாறு பேசுகிறவர்கள், நூல்களை ஏன் படிக்க வேண்டும் என்று விளக்கிச் சொல்கிறவர்கள், புதிய சிந்தனைகளை மக்கள் மனதிலே விதைக்கக்கூடியவர்களை அழைத்து நடத்துகிற இந்த மன்றத்தில் இத்தனைபேர் வந்து அமர்ந்திருக்கிறீர்கள் என்றால் நான் மீண்டும் சொல்வேன், இதுதான் தமிழ்நாடு என்ற பேருவகை எங்களுக்கு ஏற்படுகிறது.
இந்த நிகழ்ச்சியிலே எனக்கு முன்னாலே அருமை தங்கை கபிலா விசாலாட்சி பேசினார். அவர் ஒரு காலத்திலே "தமிழ் பேச்சு எங்கள் மூச்சு' என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது நானும் அதில் நடுவராக சென்றிருந்தேன். அன்றைக்கு நம்பிக்கைக்குரியவராகத் தெரிந்தவர், இன்றைக்கு இந்த மேடையிலே ஆற்றொழுக்காக எந்தவிதமான தங்குதடையுமில்லாமல் பேசுகிறார். நிறைய நூல்களை படித்து அதனுடைய கருத்துக்களை உங்களோடு பகிர்ந்துகொண்டார். ஒரு காலத்திலே இந்த தமிழ்நாட்டில் வாழ்ந்த எங்கள் திராவிட இயக்கத்தினுடைய முன்னோடி அண்ணன் மன்னை நாராயணசாமி அவர்கள் சொல்வார்கள், "எந்த நிகழ்ச்சிக்குச் சென்றாலும் கொஞ்சம் முன்கூட்டியே செல்லவேண்டும்.
அதற்கு காரணம், எதிர்பார்ப்பவர்களுக்கு பரபரப்பை ஏற்படுத்த வேண்டாம் என்பதைவிட, முன்னால் பேசுகிறவருடைய உரையினைக் கேட்க வேண்டும். அப்படி கேட்கிறபோது அவர்கள் சொல்லக்கூடிய கருத்துக்கள் நமக்கு பயனுள்ளதாக இருக்கும். சில புதியவையாக இருக்கும். சில நேரங்களில் நாம் விளக்கம் சொல்ல வேண்டியதாக இருக்கும்' என்று சொல்வார்கள்.
அதுபோல இந்த இளம்பெண் பேசிய பேச்சில் பலரைப் பற்றிய புதிய செய்திகள் இருந்தன. அதிலே குறிப்பாக அவர் சிங்கத்தைப் பற்றி ஒரு கருத்து சொன்னார். சிங்கத்தை எப்படி ராஜாவாகத் தேர்ந்தெடுத்தார்கள் என்றால், தான் உண்டது போக மீதியை எவர் உண்டால் என்ன என்று செல்லுகிற பெருந்தன்மை அதற்கு உண்டு. அதை எப்படி வேண்டுமானாலும் பார்க்கலாம். அது விமர்சனத்திற்கு உள்ளாகும். என்னைப் பொறுத்தவரை சிங்கம் என்பதை அதனுடைய கானகத்தினுடைய ராஜா என்று சொல்வதற்கு காரணம், யாருக்கு பின்னால் வலிமை பொருந்தியவர்களும் கட்டுப்பட்டு நடக்கிறார்களோ அவர்கள்தான் தலைவன்.
தனக்கு பின்னாலே ஆள் சேர்த்து வைத்துக்கொள்கிறவர்கள் அல்ல. காரணம் புரியாமல் பின்னால் வருகிறவர்கள் அல்ல. இவன் தன்னைவிட உயர்ந்தவன் என்று நம்புகின்ற அளவிற்கு தகுதியும் தன்மையும் ஆரவாரமும் ஆர்ப்பாட்டமும் இல்லையென்றாலும் கூட, யாரிடம் தெரிகிறதோ, யாரிடம் புலப்படுகிறதோ, யார் தங்களுடைய செயல் மூலமாக உணர்த்துகிறார்களோ, அவர்கள் தான் தலைவர்கள். அந்த வரிசையில் தான் சிங்கம் வருகிறது. அதனாலேயே அது ராஜாவாக இருக்கிறது.
மேலும், புலி வலிமையானது தான். ஆனால் சிங்கத்தை எதிர்க்கும் துணிவு அதற்கு வராது. யானை மிகப்பெரிய வலிமை கொண்டதுதான். எதையும் தன்னுடைய துதிக்கையால் சுழற்றி அடித்துவிடும். ஆனால் அது துதிக்கையை உயர்த்துவதற்கு முன்பாகவே அதன் தலையின் மீது ஏறி மத்தகத்தின் மீது அடிக்கின்ற துணிச்சல், வலிமை சிங்கத்திற்கு தான் உண்டு. கானகத்திலே எல்லா மிருகங்களும் ஓடும். ஓடுகிற போது திரும்பிப் பார்க்கும். எதற்காக என்றால், பின்னால் வேறு மிருகங்கள் விரட்டி வருகிறதா?
வேறு ஏதும் ஆபத்து வருகிறதா? என்று பார்க்கத்தான். ஆனால் சிங்கம் மட்டும் தான் ஓடிக்கொண்டிருக்கும்போது திரும்பிப் பார்க்காது. நின்று, மெல்ல திரும்பிப் பார்க்கும். அந்த பார்வையினுடைய பொருள், எனக்கு பின்னால் வருகிறவர்கள் எல்லாம் கட்டுப்பாட்டோடு வருகிறார்களா என்ற பார்வை. அதைத்தான் அரிமா நோக்கு என்று சொல்வார்கள். இது எல்லா தலைவர்களுக்கும் பொருந்தும்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/06/trichysiva1-2026-02-06-18-42-05.jpg)
இங்கே எத்தனையோ கடைகள் உள்ளன. நான் இவற்றை கடைகளாகப் பார்க்கவில்லை. அங்கே இருப்பவைகளை அச்சிட்ட நூல்களாகப் பார்க்கவில்லை. காகிதங்களிலே மையினால் அச்சடிக்கப்பட்ட சில செய்திகளை சுமந்தவைகளாக நான் பார்க்கவில்லை. இன்றைக்கு இந்த அரங்கத்தில், இந்த திருவிழாவில், இந்த காட்சித்திடலில் ஆயிரக்கணக்கான அறிஞர் பெருமக்கள் உங்களுக்காக உள்ளே காத்திருக்கிறார்கள். என்னை உங்களோடு உங்கள் வீட்டுக்கு அழைத்துச் செல்லுங்கள், நான் எந்த நேரமும் உங்களோடு இருப்பேன். உங்களுக்கு எந்த ஐயம் வந்தாலும் நான் தெளிவுபடுத்துவேன். உங்களுக்கு இதுவரை தோன்றாததை, தெரியாததை நான் சிந்தித்து இதிலே சொல்லியிருக்கிறேன். இன்னும் சொல்ல வேண்டுமென்றால் நீங்கள் படிக்க வேண்டியதையெல்லாம் சேர்த்து நான் படித்து, ஒரு நூலிலே தந்திருக்கிறேன். என்னை உங்கள் வீட்டுக்கு அழைத்துச் செல்லுங்கள் எனக்கூறும் அறிஞர்கள் கூடியிருக்கிற ஒரு திடலாகத்தான் இதை பார்க்கிறேன்.
எனவே இதை உயிரற்ற நூலாகப் பார்க்காதீர்கள். உயிருள்ள அறிஞர் பெருமக்கள் இங்கே திரண்டு நிற்கிறார்கள் என்று பாருங்கள். அவர்கள் எல்லாம் இருக்கிற இடத்தில் எங்களைப் போன்றவர் பேசுகிறபோது பெருமிதத்துடன் பேசுகிறோம். கொஞ்சம் உவகையுடன் பேசுகிறோம். ஒன்றா, இரண்டா, எத்தனை ஆயிரம் நூல்கள், எத்தனை நூறு பதிப்பகங்கள், எத்தனை எழுத்தாளர்கள். வியப்பு மேலோங்குகிறது. ஒரு நூலகம் என்பது பல நூல்களின் தொகுப்பு அல்ல, பல அறிஞர்கள் ஒன்று கூடி ஒரு அறையில் இருக்கிறார்கள் என்று பொருள். எது தேவையோ அதை எடுத்துப் படிக்கிறபோது அதற்குத் தேவையானவை கிடைக்கும்.
அறிவு என்று சொல்கிறபோது பல அறிவுகள் உண்டு. இயற்கையாக வரக்கூடிய பொது அறிவு. படிப்பறிவு, கல்வியினால் வருகிற அறிவு. அனுபவ அறிவு, பகுத்தறிவு... இப்படி ஒவ்வொன்றாக சொல்லிக்கொண்டே போகலாம். எது பகுத்தறிவு? எதையாவது சொல்லுகிறபோது அது நம்மை அச்சுறுத்துவதாக இருந்தால் அல்லது மனதிற்கு இதமாக இல்லாமல் இருந்தால் அதை அப்படியே ஏற்றுக்கொள்வதற்கு மாறாக, என் மனம் ஏற்றுக்கொள்கிற அளவிற்கு அதை விளக்கிச்சொல், பின்னர் நான் ஏற்றுக்கொள்கிறேன் என்று சொல்வதற்கு பெயர் பகுத்தறிவு.
அப்படி சொல்லுகின்ற வகையில், நல்ல அறிவு ஒளி பரவி, இங்கே எரிகின்ற விளக்குகளை விட உள்ளே இருக்கிற நூல்களின் அறிவு வெளிச்சம் அதிகம். அந்த சுடர் எல்லா இடங்களிலும் பிரகாசிக்கும். சூரியனுடைய ஒளியைப் போல நூல்களிலிருந்து வருகின்ற கருத்துக்கள். இன்றைக்கு கபிலா விசாலாட்சி இங்கே வந்து பேசினார் என்றால், சில நூல்களைப் படித்துவிட்டு வந்திருக்கிறார். சில அறிஞர்களைப் பற்றி படித்துவிட்டு வந்திருக்கிறார்.
அதைப்போல நாமும் வாசித்து அறிவை பெருக்கிக்கொண்டு பேச வேண்டும்'' என்றார்.
முதலமைச்சருடைய கட்டளைக்கேற்ப நான் டெல்லிக்கு ஒரு கூட்டத்திற்கு சென்றுவிட்டு இன்று திரும்பியிருக்கிறேன். நேற்றைய மேடையை இன்றைக்கு எனக்கு பெரிய மனதோடு மாற்றித் தந்த பபாசி அமைப்பினருக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். என் சூழ்நிலையை அவர்கள் புரிந்துகொண்ட காரணத்தினால்தான் நக்கீரன் கோபாலிடம் பேசினேன். அவர்தான் என்னை இந்த நிகழ்ச்சிக்கு உறுதிசெய்தவர். நிலைமையைச் சொன்னபோது "எனக்கு புரிகிறது, நீங்கள் நாளை வரலாம்' என்று சொல்லி எனக்காக இந்த நிகழ்ச்சியை இன்றைக்கு மாற்றியமைத்ததற்கு நான் நன்றி சொல்கிறேன். காரணம், இந்த வாய்ப்பை நான் இழக்க விரும்பவில்லை. சென்னை புத்தகத் திருவிழாவில் பேசுகிற மகிழ்ச்சியும் பெருமையும் தனியானது.
நானும் நிறைய படித்திருக்கிறேன். பல பேரை படித்திருக்கிறேன். கல்லூரிக் காலத்திலே ஓராண்டு காலம் சிறையிலிருந்தபோது என்னுடைய வேலையே நூல்களைப் படிப்பதுதான். தலைவர்கள் எவ்வளவு சிரமப்பட்டிருக்கிறார்கள். நல்ல கருத்தைச் சொல்கிறபோது இந்த நாடு வரவேற்கிறதா? ரத்தினக் கம்பளம் விரித்து வைக்கிறார்களா என்றால் இல்லை.
அண்ணாவை ஏன் இப்போது மேற்கோள் காட்டுகிறோம்? அண்ணா மறைந்து 56 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. ஒரு மனிதன் மறைந்து அரை நூற்றாண்டுக்குப் பின்னாலும் அண்ணாவில் பெயரைச் சொல்லாமல் அரசியல் இல்லை.
அண்ணாவின் சிந்தனைகள் இல்லாமல் எதுவுமில்லை. அன்றைக்கு அவர் சொன்னது எல்லாம் இன்றைக்குத் தேவையாக இருக்கிறது. அவர் சொன்னதெல்லாம் வழிகாட்டியாக இருக்கின்றது.
அதுபோலத்தான் பெரியார் என்ற தலைவர்.
அவர் வாழ்ந்த காலத்தில் நடந்தது என்ன? யார் அவரை ஏற்றுக்கொண்டார்கள்? எத்தனை எதிர்ப்புகள், எத்தனை இன்னல்கள், கொஞ்சநஞ்சமா? ஒருமுறை அவர் கூட்டத்திற்கு போகிறபோது வழியிலே செருப்பைத் தோரணமாகக் கட்டியிருக்கிறார்கள். எல்லாம் பிய்ந்துபோன செருப்புகள். அதை அறுத்தெறியப் போகிறார்கள் தோழர்கள். அதற்கு பெரியார் சொல்கிறார்... "பேசாம இருயா, அவன் உன்னைவிட என்மீது அன்பு கொண்டவன்.' "என்னய்யா அப்படிச் சொல்கிறீர்கள்?' என்றபோது, "ஆமா நீ ஒரு நாலணா கொடுத்து துண்டு வாங்கி வந்தாய், அவர் எட்டணா கொடுத்து மாலை வாங்கி வந்தார், அவன் இந்த பிஞ்சுபோன செருப்புக்காக எத்தனை குப்பை மேடுகளை தேடிக் கொண்டுவந்து கட்டினானோ தெரியவில்லை' என்று சொல்லுகிற அந்த அணுகுமுறை இருந்தது.
முதன்முதலாக கோபால் அவர்கள் இன்று அவர் நடத்திக்கொண்டிருக்கிற அந்த பத்திரிகைக்கு பெயர் வைத்தபோது அது ரொம்ப புதுமையாக இருந்தது. அதே நேரத்தில்தான் ஜூனியர் விகடனும் வந்தது. ஆச்சரியத்தோடு பார்த்தார்கள். அவர் அந்த நக்கீரன் பெயரை எங்கிருந்து வாங்கினார் என்று எங்களுக்குத் தெரியும். ஆனால் அந்தப் பெயரை தேர்ந்தெடுத்தார் அல்லவா, அதுதான் அவருடைய சிறப்பு. இன்றுவரை அவர் அந்த நிலையில்தான் இருக்கிறார். யாராக இருந்தாலும் சரி... பரமனாக இருந்தாலும் சரி, பாராள்கிறவனாக இருந்தாலும் சரி, எனக்குத் தோன்றியதை நான் எழுதுவேன் என்று சொல்றதுக்கு ஈடாக இன்றைக்கு நக்கீரன் நடக்கிறது. அந்த துணிச்சலைப் பாராட்டுகிறோம்.
அந்த முயற்சிக்கு நாம் துணை நிற்கவேண்டும்.
அவருடைய எழுத்துக்களால் ஏற்படக்கூடிய மாற்றங்களைப் பார்த்து நாமும் நமதாக்கிக்கொள்ள அதை பாராட்டுகின்றோம்.
நான் நாடாளுமன்றத்தில் பேசினேன். மறைக்கப்பட்ட தென்னிந்திய விடுதலை வீரர்கள் என்று நான் பேசினேன். வடக்கே இருப்பவர்களை மட்டுமே வாழ்த்துகிறீர்களே, பாராட்டுகிறீர்களே, நாங்களும் சேர்ந்து கொண்டாடுகிறோமே, என் மண்ணிலே பிறந்த வீரர்களை, வீராங்கனைகளை நீங்கள் மதிப்பதில்லையே ஏன்? என்று நான் கேட்டேன். அங்கே நான் பேசியதை நூலாகக் கொண்டுவந்திருப்பவர் கோபால். நான் அவரிடம் சொல்லவே இல்லை, அவர் தன் கடமையாக அதை உணர்ந்தார்.
தமிழ்நாட்டு வீரர்களைப் பற்றி தமிழ்நாட்டிலிருந்து சென்ற ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் பேசுகிறார் என்றால் அது அன்றைக்கு பேசியதோடு, சில யூடியூப் சேனலில் வந்ததோடு முடிந்து விடக்கூடாது என்று எல்லோருக்கும் சென்று சேரவேண்டுமென்று நூலாக வெளியிட்டு இங்கே பதிப்பகத்திற்கும் கொண்டுவந்திருக்கிறார்கள்... நான் நன்றி சொல்கிறேன்.
நான் நாடாளுமன்றத்தில் வயிற்றெரிச்சலோடு, வேதனையோடு, ஆதங்கத்தோடு பேசினேன். அதை கேட்டுவிட்டு உணர்ச்சிவசப்பட்ட நக்கீரன்கோபால், தொடராக வெளியிட்டதோடு நில்லாமல், அதை தொகுப்பாகவும் வெளியிட்டிருக்கிறார். வழக்கத்திற்கு மாறாக நான் அதிக நேரம் பேசியிருக்கிறேன், ஆனால் பேசிய கருத்துக்கள் எதுவும் வீணானவை அல்ல. உங்களுக்கு தெரியவேண்டியவை, மறைக்கப்பட்டவை, மறக் கப்பட்டவை, தெரிந்துகொள்ளாமலே போனவை.
இன்றைக்கு தலைவர்களாக நிலைத்து புகழ்பெற்றிருக்கிற எல்லோரும் வாழ்க்கையில் சந்தித்தது சோதனைகள், நிந்தனைகள், பல்வேறு அவமானங்கள். கடைசி நாள்வரை கேவலமாகத் தூக்கியெறியப்பட்டவர்கள், ஆயிரம், நூறு ஆண்டுகளைக் கடந்து வாழ்கிறார்கள் என்றால் தீர்க்கமான முடிவும், உறுதியான செயல்பாடும், எதைக் கண்டும் கலங்காத தன்மையும் தான் காரணம். இளைய தலைமுறையிடம் நான் அதைத்தான் எதிர்பார்க்கிறேன்.
நீங்கள் யாரோ ஒருவராக, ஏதோ ஒரு படிப்பு, ஏதோ ஒரு வேலை, எவ்வளவோ சம்பளம், ஒரு கார், ஒரு வீடு, வசதியோடு, நாங்கள் அங்கே போனோம், இங்கே போனோம் என்று சொல்லி வாழ்வதல்ல வாழ்க்கை. உங்கள் மரணத்திற்குப் பின்னாலும் உங்கள் பெயர் நிலைத்திருக்க வேண்டும். ஒரு தலைவனாக, ஒரு விஞ்ஞானியாக, ஒரு கண்டுபிடிப்பாளனாக, ஒரு சிந்தனையாளனாக நீங்கள் மாறவேண்டும். இன்றைக்கு இந்த புத்தகத் திருவிழாவில் எனக்கு கிடைத்த வாய்ப்பில் இதுதான் உங்களுக்கு நான் வைக்க விரும்புகிற வேண்டுகோள். சிறந்த எதிர்காலத்தை இளைஞர்களுக்குத் தருவதல்ல எங்கள் கடமை. சிறந்த இளைஞர்களை எதிர்காலத்திற்கு தருவதுதான் எங்கள் கடமை. எவ்வளவு நல்ல நாட்டை உருவாக்கித் தந்தாலும் காப்பாற்றவேண்டியவர்கள் கையாலாகாமல் இருந்தால் அதில் உபயோகம் இல்லை. ஆனால் ஒன்றுமே இல்லாத மண்ணைக் கொடுத்தால்கூட அதை உருவாக்கிக் காட்டக்கூடிய வல்லமை இளைஞர்களுக்கு இருக்குமேயானால் எதிர் காலம் வளமானது.
எனவேதான் நான் நக்கீரன் கோபால் அவர்களுக்கு, வைரவன் அவர்களுக்கு, இங்கிருக்கிற நிர்வாகிகள் எல்லோருக்கும் சொல்வேன், நல்லவேளை இன்றைக்கு நான் வந்தேன். நீண்ட நாள் கனவு இது. பல ஊர்களில் பேசியிருக்கிறோம். இங்கே இந்த இடத்தில் பேச வேண்டுமென்று பேசியிருக்கிறேன். சற்றேறக்குறைய ஒருமணி நேரம் பேசியிருக்கிறேன். உணர்ச்சிபொங்கத்தான் பேசினேன். நான் கருத்துக்களை சுமந்து வரவில்லை, என் உள்ளத்தில் இருந்ததைப் பேசுகிறேன். நான் வகுத்துக்கொண்டு வரவில்லை, ஆனால் நான் சொன்னதைப்போல் எதிரே இருக்கிற நீங்கள் என்னைப் பேசவைத்தீர்கள். சுப.வீ. வந்து எதிரே உட்கார்ந்தவுடன் எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அவர் என்மீது மாறாத அன்பு கொண்டவர். என் பேச்சில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். கோபாலும் அப்படித்தான்... எல்லோரும் அப்படித்தான். ஆனால் இன்றைக்கு வேலை முடிந்து கடைக்கு வந்த நோக்கம் முடிந்து, கடைகள் எல்லாம் அடைக்கப்பட ஆரம்பித்துவிட்டன. வீட்டுக்கு திரும்பியவர்கள் இவ்வளவுநேரம் உட்கார்ந்திருக்கிறீர்களே, இன்றைய நிகழ்வின் வெற்றி இதுவென்று நான் கருதுகிறேன். எனவேதான் வந்தவர்கள், வாங்கியவர்கள், வாங்கிப் படிக்கப் போகிறவர்கள், அதை அப்படியே வைத்துக் கொண்டிருக்காமல் என் தம்பி இமையத்தைப் போல, ஊருக்கு தெரியாத கிராமப்புற வாழ்க்கை எழுதுகிறவர்களும் நிறைய எழுதியிருக்கிறார்கள். இதையெல்லாம் வாங்கிக்கொண்டு படிப்பதோடு மட்டுமல்லாமல் இதுபோன்ற நிகழ்வுகளில் எங்களைப் போன்றோர் பேசுகிற கருத்துக் களையும் சுமந்துசெல்லுங்கள். இளைய தலைமுறை சார்ந்தவர்கள் குறிக்கோள் ஒன்றை வகுத்துக் கொள்ளுங்கள், உறுதியாக நில்லுங்கள்!
-தொகுப்பு: தாஸ்
படம்: ஸ்டாலின்
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/06/trichysiva-2026-02-06-18-41-54.jpg)